மாநிலத்தில் அடுத்த 1 வருடத்திற்கு எந்த கொண்டாட்டமும் இல்லை -கேரளா அரசு
கேரளாவில் அடுத்த ஒரு ஆண்டு அனைத்து விதமான கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் தெரிவித்தார்.
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கடந்த செப்டம்பர் 1 ஆம் நாள் கேரளா முதல்-அமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது,
வெள்ளத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முயற்சியால் முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை 28,000 ஆக குறைந்துள்ளது; முகாம்களின் எண்ணிக்கை 236 ஆகும். அதாவது 14,22,707 பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி ரூ. 10,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4.25 லட்சம் மக்களுக்கு உதவி அளிக்கப்பட்டு உள்ளது. 4 நாட்கள் தொடர்ச்சியான வங்கி விடுமுறை வருவதால் நிதி உதவி அளிப்பதில் தாமதம் தாமதமாகி விட்டது. அடுத்த 2 நாட்களில் விநியோகம் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வெள்ள பாதிக்கப்பட்ட வீடுகளில் 81 சதவிகிதம் சுத்திகரிப்பு வேலை முடிந்தது; 4,72,633 வீடுகள் இதுவரை சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணியில் ஒரு 14,000 உறுப்பினர்கள் கொண்ட வலுவான அணி வேலை செய்கிறது. நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை சுத்தம் செய்யும் பணி செப்டம்பர் 2 ஆம் தேதி நிறைவு செய்யப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று கேரளா அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த ஒரு வருடத்திற்கு மாநிலத்தில் அரசு சார்பாக நடைபெறும் அனைத்து உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவின் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழா மற்றும் இளைஞர்கள் திருவிழாக்கள் உட்பட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என கேரளா அரசு சார்பில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. #KuralFloods