கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத்தை குறைத்து உத்தரவிட்டு வரும் நிலையில், கேரள அரசு புதிய அறிவ்ப்பை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகையை  குறைத்துள்ளது. அதன்படி, தலைக்கவசம் அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும் சென்றால் வசூலிக்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் அபராத தொகை 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனத்தில் செல்லும்போது கைபேசி உபயோகித்தால் விதிக்கப்படும் அபராத தொகை 10ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. வேகமாக செல்லும் இலகுரக வாகனங்களுக்கு ஐந்தாயிரத்தில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு  மூவாயிரம் ரூபாயுமாக அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று போட்டிபோட்டுக் கொண்டும், ஆபத்தான முறையிலும் வாகனத்தில் செல்வோருக்கான அபராத தொகை பத்தாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏகே சசீந்திரன், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்ததால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.