பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குல்பு‌ஷன் ஜாதவ் (வயது 46) விடுவிக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக உளவு பார்த்து வந்ததாக குல்பு‌ஷன் ஜாதவை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட குல்பு‌ஷன் ஜாதவ் மீதான வழக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. 


இந்த செய்தி இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது.


காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது:


குல்பு‌ஷன் ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த பலவீனமான அரசாக மாறிவிடும் என்றார்.


பார்லிமென்டில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:-


ஜாதவிற்கு நீதி கிடைக்க இந்தியா அனைத்து வகையிலான  நடவடிக்கையையும் எடுக்கும். ஜாதவ் பெற்றோருடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. ஜாதவ் இந்தியாவின் மகன். அவரை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.


பாகிஸ்தான் மரண தண்டனை நிறைவேற்றினால் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்ய ரீதியிலான உறவில் கடும் விளைவுகள் ஏற்படும். ஜாதவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முட்டாள்தனமானது. ஜாதவ் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார். எந்த விலை கொடுத்தாவது அவரை மீட்டு கொண்டு வருவோம் என அவர் கூறினார்.