ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள்; பிரச்சனை வராது: கர்நாடக முதல்வர் சர்ச்சை பேச்சு
கொலை செய்த கும்பலை ஈவு இரக்கம் பார்க்காமல் சுட்டுத்தள்ளுங்கள் என கூறிய கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியின் பேச்சு சர்ச்சை ஏற்ப்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிர்வாகியான பிரகாஷ் என்பவரை நேற்று ஒரு கும்பல் கொலை செய்தது. கொலை செய்த கும்பலை ஈவு இரக்கம் பார்க்காமல் சுட்டுத்தள்ளுங்கள் என கூறிய கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியின் பேச்சு சர்ச்சை ஏற்ப்படுத்தி உள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிர்வாகியான பிரகாஷ் நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியில் வந்த ஒரு கும்பல் அவரின் காரை நிறுத்தி, அவரை வெளியே இழுத்து போட்டு அடுத்து வெட்டி கொலை செய்து, மீண்டும் காரில் போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கொலை நடந்த சமயத்தில் கர்நாடகா முதல்வர் எச்.டி. குமாரசாமி, விஜயாபுரம் பகுதியில் இருந்தார். அப்பொழுது அவருக்கு போன் மூலம் பிரகாஷ் கொல்லப்பட்ட சம்பவம் தெரிவிக்கப்பட்டது. போனில் பேசிக்கொண்டு இருந்த முதல்வர் "பிரகாஷ் மிகவும் நல்லவர். எதற்காக அவரைக் கொலை செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. கொலை செய்த கும்பலை ஈவு இரக்கம் பார்க்காமல் சுட்டுத்தள்ளுங்கள். எந்த பிரச்சனையும் வராது" எனக் கூறியுள்ளார்.
கர்நாடகா முதல்வர் எச்.டி. குமாரசாமி பேசியதை, அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அதுக்குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் எதிர்கட்சியான பாஜக, குமாரசாமிக்கு பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செல்போனில் பேசியது குறித்து முதல்வர் எச்.டி. குமாரசாமியி விளக்கம் அளித்துள்ளார். அதில், யாரையும் சுட்டுக்கொல்லச் சொல்லி நான் உத்தரவிடவில்லை. அப்பொழுது நான் இருந்த சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டேன். இது வெறும் உணர்ச்சி காரணமாக தான் வந்தது எனக் கூறி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.