புதுடெல்லி: செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இன்று கடைசி நாள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என அறிவித்தார். இந்நிலையில் செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், டெபாசிட் செய்து அதற்கு பதிலாக புதிய நோட்டுகளை பெற அவகாசம் அளிக்கப்பட்டது. 


வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி அதாவது இன்று வரை செலுத்தலாம் என்ற காலக்கெடு பிரதமர் மோடி விதித்தார். இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய 50 நாள் கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.


இந்நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து, நேற்று தில்லியில்டெல்லியில் செய்தியாளர்களுக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:


ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அளவில் பலன்கள் கிடைத்துள்ளன. மக்களிடம் இருந்த பெரும்பாலான ரொக்கப் பணம், வங்கிகளின் சுழற்சிக்குள் வந்துவிட்டன.


வரி வருவாய் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. டிசம்பர் 19-ம் தேதி வரை, மொத்த வருமான வரி வசூல் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அச்சப்பட்ட அளவுக்கு மோசமடையவில்லை. மாறாக, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நிதி மற்றும் ஆயுள் காப்பீட்டுத் துறைகளில் முதலீடு, எரிபொருள் நுகர்வு, சுற்றுலாத் துறை வளர்ச்சி ஆகியவை அதிகரித்துள்ளன.


இந்நிலையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் குறைந்தபட்சம் ரூ 10000 அபராதம் விதிக்கப்படும் என்று நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புழக்கத்தில் இருந்த ரூ.15.4 லட்சம் கோடி மதிப்புள்ள உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு, அதற்குப் பதிலாக பெருமளவிலான ரொக்கப்பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.


என்று அவர் கூறினார்.