அரசியல் களத்தில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர்கள்...
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தவர்களில் கவுதம் முதல் நபர் இல்லை., இவருக்கு முன்னதாக வந்தவர்கள் நிறைய பேர் உண்டு...
இந்தியாவில் அதிகளவில் ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட் எனலாம். இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற விளையாட்டு வீரர்களை காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகம்.
ஆனால் இந்த மசுவு அவர்கள் கிரிக்கெட் களத்தில் இருக்கும் வரையில் தான். கபில தேவ், சச்சின் டெண்டுல்கர் போன்ற சில வீரர்கள் மட்டும்., களத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தங்களது புகழ்ச்சியை தக்க வைத்து வருகின்றனர்.
சரி கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வீரர்களின் வாழ்க்கை என்னவாகிறது?... ஆங்கில புலமை கொண்ட சிலர் கிரிக்கெட் வர்னனையாளராக உரு மாறிவிடுகின்றனர். சம்பாதித்த பணத்தை கொண்டு சிலர் தொழிலதிபர்களாக மாறிவிடுகின்றனர். மேலும் சிலர் விதிவிலக்காய் அரசியல் களத்தில் குதித்து விடுகின்றனர்.
அந்த வகையில் இன்று அரசியல் களத்தில் குதித்து ‘கிரிக்கெட்டர் - அரசியல்வாதி’ என்னும் பட்டியலில் இணைந்திருப்பவர் கவுதம் கம்பீர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான இவர் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த நிலையில் இன்று பாஜக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார்.
உலக கோப்பை 2011 மற்றும் டி20 உலக கோப்பை 2007-ல் விளையாடிய இந்திய வீரர்களில் முக்கியமானவராக திகழ்ந்த கவுதம் கம்பீர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி திறனால் ஈர்க்கப்பட்டு தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்டுள்ளார். எனவே வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் இருந்து பாஜக கட்சி சார்பில் கவுதம் அரசியல் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தவர்களில் கவுதம் முதல் நபர் இல்லை., இவருக்கு முன்னதாக வந்தவர்கள் நிறைய பேர் உண்டு...
நவஜோத் சிங் சித்து : சர்ச்சைகுறிய பேச்சுகளால் நாடுமுழுதும் அறியப்பட்ட அரசியல்வாதி. கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவை தேர்ததில் பாஜக கட்சியின் சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவை சென்றார். பின்பு 2009-ஆம் ஆண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக மக்களவை சென்றார். எனினும் 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை, மாறாக 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக பாஜக கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்த சித்து, தனது தோழமைகளுடன் அவாஜ்-இ-பஞ்சாப் என்னும் கட்சியை துவங்கினார். பின்னர் 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, கிழக்கு பஞ்சாப் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.
மொகமது அசாருதீன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொகமது அசாருதீன் கடந்த 2009-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உத்திரபிரதேச மாநிலத்தின் மொராடிபாத் மக்களவை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். தற்போது தெலங்கானா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக பதவி வகித்து வருகின்றார். கடந்த 2000-ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி தனது கிரிக்கெட் வாழ்க்கையை அசாருதீன் முடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கிரித்தி அசாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரித்தி அசாத், கடந்த பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் பிஹார் முன்னாள் முதல்வர் பகவத் ஜா அசாத்-ன் மகன் ஆவார்.
பிரவின் குமார்: 2016-ஆம் ஆண்டு உத்திர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
சேத்தன் சௌஹான்: ஆளும் பாஜக கட்சியின் சார்பில் உத்திர பிரதேசத்தின் அமோரா தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை மக்களவை சென்றவர். 1991 மற்றும் 1998 ஆகிய தேர்தல்களில் மக்களவை சென்ற சேத்தன், 1996, 1999 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் தோல்வியை தழுவினார்.
வினோத் கம்பிளி: முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் கம்பிளி, லோக் பாரதி கட்சியில் இணைந்தார். 2009-ஆம் ஆண்டு மும்பையின் விக்ரோஹலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
மொகமது கயிப்: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பீல்டராக கருதப்படும் மொகமது கயிப், 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முன்னிருக்க காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உத்திரபிரதேச மாநிலம் போல்பூர் தொகுதியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளர் கேசவ் பிரசாத் மயுரா-விடம் தோல்வியை தழுவினார்.