மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு... சராசரியாக 65% வாக்கு பதிவு!!
17 ஆவது மக்களவைக்கான தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவு!!
17 ஆவது மக்களவைக்கான தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவு!!
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில், ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகள், தெலங்கானாவின் 17 தொகுதிகள், உத்திரப்பிரதேசத்தின் 8 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிலும், அசாம் மற்றும் உத்தரகாண்டில் தலா 5 தொகுதிகளிலும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காஷ்மீர், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரம், நாகலாந்து, சிக்கிமில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது. சத்தீஷ்கர், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும், லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் தலா 1 மக்களவை தொகுதி மட்டுமே உள்ள நிலையில், அங்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இவ்வாறு, ஆயிரத்து 279 வேட்பாளர்களுடன் முதற்கட்ட தேர்தல் எதிர்கொண்ட 91 மக்களவைத் தொகுதிகளில், வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில தொகுதிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிவுற்றது.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜூஜூ, வி.கே.சிங் உள்ளிட்டோர், முதற்கட்ட தேர்தலை எதிர்கொண்ட மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் முக்கியமானவர்கள் ஆவர். உத்தரப்பிரதேசத்தில் பாக்பட் (Baghpat) தொகுதியில் மேள தாளங்கள் முழங்க, மலர்தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
உத்தரகாண்டில் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் டேராடூனில் வாக்களித்தார். தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் நிசாமாபாத் தொகுதியில் வாக்களித்தனர். நாக்பூர் மக்களவை தொகுதியில் RSS தலைவர் மோகன் பகவத் வாக்குப்பதிவு செய்தார். நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் BJP வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி எண் 220-ல் தனது வாக்கினை பதிவு செய்தார்.