வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு ஆட்சியின் விரக்தியால், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலையில் காங்கிரசும், மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பாஜகவும் வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தலை சந்தித்து வருகின்றன. 


அதன்படி ஏப்ரல் 11, 18, 23 தேதிகளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், தெலங்கானா, திரிபுரா, சிக்கிம், கோவா, குஜராத், அந்தமான், சட்டீஸ்கர், அருணாச்சல பிரதேசம், அசாம், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில்  போட்டியிட உள்ளார். வாரணாசியில் வரும் மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக வாரணாசிக்கு வரும் மோடி, நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று மதியம் 2 மணியளவில் வாரணாசி வந்தடையும் பிரதமர் மோடி, பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 


அங்கிருந்து சாலை வழியாக கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார். பேரணியில் 150-க்கு மேற்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மண்டப்புரா மற்றும் சோனப்புரா பகுதிகளும் அடங்கும். இந்த பிரசார பேரணியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும், பாஜக ஆளும் மாநில  முதல்வர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை பேரணியை முடித்துகொள்ளும் மோடி, நாளை காலை, காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது பாஜக தலைவர் அமித்ஷாவும் கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது.


வாரணாசி சாலை அமைக்க உ.பி அரசு நூறு ஆண்டுகள் பழமையான பல வீடுகளை இடித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியும் சிறப்பாக இல்லை என்று மக்கள் சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொகுதியில், மோடியை எதிர்த்து, பிரியாங்கா காந்தி போட்டியிட போவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரியங்கா காந்தியும் தோல்வியோ, வெற்றியோ போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.