நேரு-இந்திரா செய்யாததை ராகுல் செய்ய விரும்புகிறார்: அருண் ஜேட்லி ஆவேசம்
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் மற்றும் சி.ஆர்.பீ.எப் துருப்புக்களை குறைப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு விதிகளை பலவீனப்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள "தேர்தல் அறிக்கை" நாட்டை பிளவுப்படுத்தும் என கடுமையாக விமர்சித்து உள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சட்டங்களை மீறுவதாக உள்ளது. மாவோயிஸ்டுகளை காப்பாற்றுவதற்காக, CRPF இல் ஒரு மாற்றம் செய்யப்பட்டும் எனக் கூறப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.
இன்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வாசித்தார். பின்னர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி கூட்டாக இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நன்மை, பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ஏ (தேசத்துரோக சட்டப் பிரிவு) நீக்கப்படும் என்றும், காஷ்மீரில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மறு பரிசீலனை செய்வோம், காஷ்மீரில் படைகள் எண்ணிக்கையை குறைப்போம் என்றும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டு உள்ளது.
இதற்க்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதுக்குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தான வாக்குறுதிகள் கொண்டது. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 நீக்குவதாக கூறியுள்ளார். இதன்மூலம் மாவோயிஸ்டுகளை காப்பாற்றப்படுவார்கள். காஷ்மீரில் படைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்பு பலவீனப்படும். நேரு மற்றும் இந்திரா காந்தியும் நீக்காத, இந்த விதிகள் ராகுல் காந்தி நீக்குவதாக கூறுவது மிகவும் ஆபத்தானது. காங்கிரஸ் தலைமையிலான ராகுல் காந்தி ஜிஹாதி மற்றும் மாவோயிஸ்டுகளின் பிடியில் உள்ளார் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ஏ அகற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளது. அதாவது, காங்கிரஸ் ஆட்சியில் தேசத்துக்கு எதிராக யாராவது செயல்பட்டால், அது குற்றமாக கருதப்படாது என்பதைக் காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புக்கு இது சரியானது அல்ல. இதுபோன்ற வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் கூறும் ஒரு கட்சி, தேர்தலில் ஒரு வாக்கு கூட வாங்க தகுதியற்றது என ஆவேசமாக கூறினார்.