4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 5 மணி வரை 50.60% வாக்குகள் பதிவு
4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் 4வது கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. ஒடிசாவில் எஞ்சிய 41 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது.
மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், எஸ்எஸ் அலுவாலியா, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ், நடிகை ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்ட 945 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.
5 மணி வரை 72 தொகுதிகளில் 50.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்காளம் 66.46 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 45.08 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 57.13 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 57.77 சதவீதமும், மகாராஷ்டிராவில் 42.52 சதவீதமும், ஒடிசாவில் 53.61 சதவீதமும், ராஜஸ்தானில் 54.75 சதவீதமும், பீகாரில் 44.33 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 9.37 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.