சிறுமிகளை பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டை விதிக்கும் மசோதா மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தி வந்த போதிலும், இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


காஷ்மீரின் கதுவாவில் 8 வயது சிறுமி, உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டம் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.


இந்த அவசரச்சட்டத்திற்கு மாற்றாகத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவையில் கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று மக்களவையில் 2 மணிநேரம் விவாதம் நடைப்பெற்றது. 


விவாதத்தின் போது உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்ததாவது...


"12 வயதுகுட்பட்ட சிறுமிகளை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இத்தகைய கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் பெண்களைப் பலாத்காரம் செய்தால் அதற்கு மட்டுமே தண்டனை விதிக்கும் வழிமுறை இருந்தது. ஆனால், 16 வயதுக்கு கீழ்பட்ட, அல்லது 12 வயதுக்குள் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள், சட்டவிதிகள் இல்லை. அந்தத் தண்டனை விவரங்கள், கடினமான சட்டங்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன.


இந்நிலையில் 12-வயதுக்கு உட்பட்ட சிறுமகளுக்கு இழைக்கப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே உலுக்கி வருகின்றன. எனவே 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம் என இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.


அதேவேலையில் பெண்களைப் பலாத்காரம் செய்தால் விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனையான 7 ஆண்டு தண்டனை, 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறை தண்டனையாகவும் விதிக்கப்படும்.


16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் வழங்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறையாகவும் மாற்றப்படும்.  16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கூட்டுப்பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும்.


12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படும். 12வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவர்.


சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து, நீதிமன்றத்தால், தண்டனை அறிவிக்கப்பட வேண்டும் என்றும் இந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


அதேவேலையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் அல்லது கூட்டுப்பலாத்காரம் செய்ததாக எழும் வழக்கில் குற்றம்சாட்டப்படும் எவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படாது. என குறிப்பிட்டுள்ளார்.