வெளிநாடு வாழ் இந்தியரின் நலனை பாதுகாக்க மத்திய அரசு புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் கேரள மக்களின் சார்பில் நடைபெறும் லோகா கேரளா சபா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நேற்று துவக்கி வைத்து பேசினார்.


நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார், தொடர்ந்து பினராயி விஜயன் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க தேசிய கொள்கையோ சட்டமோ இதுவரை இயற்றப்படவில்லை என்றும், இது மிகவும் துரதிஷ்டவசமானது எனக் குற்றம்சாட்டினார்.



மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு உரிய விவரங்களை அளிக்கவோ பாதுகாப்பு வழங்கவோ மத்திய அரசு இதுவரை எந்த அமைப்பையும் உருவாக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் கேரள அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கு பயிற்சி அளித்து வருகிறது எனவும் தெரிவித்தது.


தொடர்ந்து பேசிய அவர், பிரவேசி லீகல் செல் உருவாக்கப்பட்டதன் மூலம் வெளிநாட்டு வாழ் கேரள மக்களுக்கு பெரும்பான்மையான உதவிகளை செய்ய அரசு முயற்சி செய்து வருகிறது எனவும், மத்திய மாநில அரசுகள் மற்றும் வெளிநாட்டு வாழ் மக்கள் ஆகியோர் ஒன்றிணையும் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு விரைவில் எடுத்து செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


மேலும், புதிய குடியேற்ற கொள்கையை மத்திய அரசு திட்டமிட்டு வந்தாலும் இடைதரகர்களால் நடத்தப்படும் மோசடிகள், ஆவணங்களை சரிபார்ப்பதில் காட்டப்படும் பாகுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.