லண்டன் புத்தக வெளியீட்டு விழா : இந்திய தூதர் மற்றும் விஜய் மல்லையாவும் பங்கேற்பு
தொழில் அதிபர் விஜய் மல்லையா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாததால் அவர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை வழக்கு பதிவு செய்தன. இதனால் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறினார். அவர் தற்போது லண்டனில் உள்ளார். விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்குவது, பாஸ்போர்ட்டை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளன.
மும்பை தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்ட குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள பொருளாதார பள்ளி ஒன்றில் நடைபெற்ற எழுத்தாளர் சூகேல் சேத் எழுதிய வெற்றிக்கான சூத்திரம் என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரிட்டனுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னாவும் கலந்து கொண்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவிற்கு வந்து வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்து வரும் விஜய் மல்லையா தனது புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி கருத்து தெரிவித்த சேத், யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை எனவும் டுவிட்டர் மூலமாக அழைக்கப்பட்டதாகவும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சியாகத்தான் அது நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் மல்லையா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை கவனித்த இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உடனடியாக கிளம்பிச்சென்றதாகவும் சேத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.