இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து, தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வங்கிகளிடம் ரூ. 9,000 கோடி கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்தார் விஜய் மல்லையா.


இதனையடுத்து விஜய் மல்லையாவிடம் கடன் பாக்கியை வசூலித்து தரும்படியும், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் 13 இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.


தற்போது கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கிலும், பணமோசடி, அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்ட மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலும் தேடப்படும் விஜய் மல்லையா லண்டனில் உள்ளார்.


இதை ஏற்று, விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் (Sajid Javid) கடந்த பிப்ரவரி மாதம் கையெழுத்திட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார்.


மல்லையாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவின் மேல்முறையீட்டை நிராகரித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


இந்த உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்திற்கு விஜய் மல்லையா செல்ல முடியும் என்றபோதிலும், அடுத்த 6 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என்பது குறிப்பிட்டதக்கது.


எனவே, விஜய் மல்லையாவை நாடு கொண்டுவரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயற்சிகள் வெற்றியை நெருங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.