ஆடம்பர கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதைதொடர்ந்து ஆடம்பர, சொகுசுக் கார்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவது தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சில் குழு பல்வேறு கட்டங்களாக கூடி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியை முடிவு செய்து வந்தது. பெரும்பாலான பொருட்கள் மீதான வரிகள் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஜி.எஸ்.டி. வரி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.


இருப்பினும், மீதமுள்ள பொருட்களுக்கு வரிகளை முடிவு செய்வது தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்ந்து கூடி ஆலோசனை செய்து வருகிறது.


இதை தொடர்ந்து நேற்று  இந்த மசோதா மீது நடந்த சிறிய அளவிலான விவாதத்துக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி பதிலளித்து பேசினார்.


மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட கடும் அமளிக்கு மத்தியில் பேசிய ஜெட்லி கூறுகையில், மேற்படி கார்களுக்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைக்கப்பெறும் தொகையானது, ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்புகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.


இதைத்தொடர்ந்து மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. மேலும், முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.