மகாராஷ்டிரா மாநிலத்தில் 'சேஸ் தி வைரஸ்' பிரச்சாரம் தொடங்குகிறது, 2 நாட்களில் இரட்டிப்பாகிய கொரோனாவின் பாதிப்பின் வேகம்  14 நாட்களில் இரட்டிப்பு என்ற அளவில் குறைந்திருக்கிறது... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: இரட்டிப்பாக்க விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ள மகாராஷ்டிரா அரசு, மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை மேலும் கட்டுப்படுத்த ‘சேஸ் த வைரஸ்’ என்ற பிரச்சாரத்தைத் முன்னெடுத்துள்ளது.


நாட்டின் பொருளாதாரத் தலைநகரில் கொரோனாவின் தொடர்பு சங்கிலியை உடைக்கும் முயற்சியில் தொடர்பு தடமறிதல் வழிமுறையில் ஒன்றாக ‘சேஸ் த வைரஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்தின் கீழ், கொரோனா பாஸிடிவ் என்று சோதனையில் கண்டறியப்பட்ட ஒரு நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் 15 பேர் கண்டிப்பாக அரசின் தனிமைப்படுத்தல் முகாம்களில் வைக்கப்படுவார்கள்.


மகாராஷ்டிராவில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. தற்போது இரண்டு நாட்களுக்கு பதிலாக 14 நாட்களில் இரட்டிப்பாகி வருகிறது. அதுமட்டுமல்ல, ஆசுவாசம் தரும் விதமாக, ஏப்ரல் மாதத்தில் 7.6 சதவிகிதமாக இருந்த இறப்பு விகிதம் தற்போது 3.25 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் அஜோய் மேத்தா செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்திருந்தார்.


மாநிலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் சங்கிலியை உடைக்க மகாராஷ்டிராவால் முடியவில்லை என்று முதல்வர் உத்தவ் தாக்கரே மே 9 அன்று தெரிவித்திருந்தார். ஏப்ரல் மாதத்தில் மாநிலத்தின் இறப்பு விகிதம் 7.6% ஆக இருந்தது.


"கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாவது 2 நாட்களிலிருந்து 14 நாட்களாக  அதிகரிப்பதில் வெற்றி கிடைத்துள்ளது" என்று ஆன்லைனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் அஜோய் மேத்தா தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் வியாஸ் மற்றும்  மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) ஆணையர் ஐ.எஸ்.சஹால் ஆகியோர் மேத்தாவுடன் இருந்தனர்.


மாநிலத்தில் 16,000 கண்காணிப்புக் குழுக்கள் இருப்பதாகவும், தற்போது வரை 66 லட்சம் பேர் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவலின் சங்கிலியை உடைக்க தொடர்பு தடமறிதலுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.


கொரோனா பாதிப்பின் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் மும்பையில் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  மகாராஷ்டிராவில் சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மேத்தா தெரிவித்தார். மாநிலத்தில் 27 புதிய ஆய்வகங்கள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.   தற்போது, மகாராஷ்டிராவில் 72 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.


மாநிலத்தில் 16,000 கண்காணிப்புக் குழுக்கள் இருப்பதாகவும், தற்போது வரை 66 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலின் சங்கிலியை உடைக்க தொடர்பு தடமறிதலுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.


நோயாளிகளுக்கு 2.70 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயாராக உள்ளதாக வியாஸ் கூறினார். மாநிலத்தில் 20 சதவீத நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை என்றும் 10 சதவீதத்தினருக்கு தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் தேவை என்றும் அவர் கூறினார். நகரத்தில் கோவிட் -19 பாதிப்பினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை 3.2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்க பி.எம்.சி நடவடிக்கை எடுத்து வருவதாக சாஹல் கூறினார்.


மும்பையில் எவ்வளவு படுக்கைகள் காலியாக இருக்கிறது என்பது ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பிறகு பதிவேற்றப்படும் என்று சாஹல் கூறினார். செவ்வாயன்று, மாநிலத்தில் COVID-19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,792 ஆக உயர்ந்தது, கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 54,758 ஐ எட்டியது.


கோவிட் -19 காரணமாக நாட்டில் ஏற்பட்ட 4,337 இறப்புகளில், மகாராஷ்டிரா 1,792 இறப்புகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.   அதற்கடுத்த இடங்களில் 915 இறப்புகளுடன் குஜராத், அதற்கடுத்து 305 இறப்புகளுடன் மத்தியப் பிரதேசம், 288 இறப்புகளுடன் டெல்லி என பட்டியல் நீள்கிறது.  இதையடுத்து, மேற்கு வங்கம் 283, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் தலா 170, தமிழ்நாடு 127 மற்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தலா 57 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.


செவ்வாய்க்கிழமை காலை 170 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதில் மகாராஷ்டிராவில் 97 பேர், குஜராத்தில் 27 பேர், டெல்லியில் 12, தமிழ்நாட்டில் ஒன்பது, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஐந்து, ராஜஸ்தானில் மூன்று மற்றும் ஆந்திரா, சண்டிகர், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, தெலுங்கானா மற்றும் உத்தரகண்ட் தலா ஒருவர் என்று அந்த அறிக்கையின் தரவுகள் கூறுகின்றன.


 - மொழியாக்கம்: மாலதி தமிழ்ச்செல்வன்.