ரயில்வே துறையில், சரியாக பணியாற்றாத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் பெரும்பாலான துறைகளில், சரியாக பணியாற்றாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய ரயில்வே துறையும் தன் அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளது.


இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் சார்பில், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்கள் மண்டலங்களில், 55 வயதை கடந்த மற்றும் 30 ஆண்டு பணி செய்து முடித்தவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பட்டியலிடப்படும் இந்த பணியாளர்களின் பணிப் பதிவேடு பற்றிய அனைத்து விபரங்களையும் அனுப்பும்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் பட்டியல்கள் கிடைத்ததும், அதில், சரியாக பணியாற்றாதவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த விபரங்கள் அனைத்தையும், எதிர்வரும் ஆகஸ்ட், 9-ஆம் தேதிக்குள அனுப்பும்படி, மண்டல அலுவலகங்களுக்கும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 


சரியாக பணியாற்றாதவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், இரயில்வே துறையின் இந்த நடவடிக்கை சரியாக பணியாற்றாத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.