மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (NRC)-க்கு எதிரான போராட்டங்களைத் தொடர மாணவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் அறிவுறுத்துவதாக கூறப்பட்டதை அடுத்து, மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா வியாழக்கிழமை தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். CAA-க்குப் பிறகு, ஊடுருவல்வாதிகள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்படுவார்கள் என்பதால் அவரது வாக்கு வங்கி நிச்சையம் பாதிக்கப்படும். இந்த அச்சத்தில் அவர் தனது மன நிலையை இழந்து, கட்டுப்பாடற்ற செயல்களைச் செய்கிறார்... அவர் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட வேண்டும்,” என்று விஜயவர்ஜியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடந்த ஒரு பொது பேரணியில் பேசிய பானர்ஜி, அனைத்து மாணவர்களுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் NRC-க்கு எதிரான போராட்டத்தை ஜனநாயக முறையில் தொடரச் சொன்னதாக கூறப்படுகிறது.


பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது. 


இதனிடையே இந்திய அரசியலமைப்புக்கு எதிராக கொண்டுவரப்படும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என கேரளா முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமேரேந்திர சிங் ஆகியோர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.