ராகுல் காந்தியின் வாக்குறுதியை விமர்சிக்கும் மாயாவதி!
ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருக்கும் வாக்குறுதி மற்றொரு போலி வாக்குறுதியாக அமையும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்!
ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருக்கும் வாக்குறுதி மற்றொரு போலி வாக்குறுதியாக அமையும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்!
சத்திஸ்கரில் நடைப்பெற்ற விவசாயிகள் நலக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும். மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதியை தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் வரவேற்றுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருமானம் வாக்குறுதி, அவர்களுடைய முந்தைய ஆட்சியின்போது அளிக்கப்பட்ட 'காரிபி ஹட்டோ' (Garibi Hatao-வறுமை ஒழிப்பு) வாக்குறுதியை ஒத்தது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை, அதேப்போல் இந்த புதிய வாக்குறுதியும் நிறைவேற்றப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இதேபோன்ற வாக்குறுதியை தான் தற்போதைய மத்திய அரசும் அளித்தது. ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் அளிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதிகள் வெற்றுக் கூச்சலாகத்தான் இருக்கிறது. இத்தகைய மிகப் பெரிய வாக்குறுதிகள் அளிப்பதிலிருந்து ராகுல் காந்தி விலகி இருக்கவேண்டும். அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற, அவருடைய கட்சி ஆளும் மாநிலங்களில் இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு ராகுல் காந்தியின் மீது நம்பிக்கை ஏற்படும்.
இல்லையேல், மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை போய்விடும். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் சிறப்பாக செயல்படவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் முன் சொல்வது குறைவு செய்வது அதிகம். ஆதாரங்களைப் பார்த்தால், மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தான் மிகச் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.