ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை
பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் மாறி மாறி தொடர்ந்து பொய்களை கூறிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என பிஎஸ்பி தலைவர் மாயாவதி கோரிக்கை.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது, அதில் மத்திய அரசின் கோரிக்கையான பத்திரிகையில் வெளியான ரபேல் ரகசிய ஆவணங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை நிராகரித்தது. மேலும் சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், அதுக்குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். அதற்க்கான தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மோடி அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு "பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக்கோரிக்கை விடுத்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.
அவர் கூறியதாவது,
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ரபேல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பெரும் ஊழல், அந்த ஊழலை மறைக்க பிரதமர் மோடி அரசாங்கம் எடுத்த அனைத்து நடவடிக்கையும் தோல்வியடைந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிஜேபி அரசாங்கம் முற்றிலும் கலக்கம் அடைந்துள்ளது. பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் மாறி மாறி தொடர்ந்து பொய்களை கூறிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆயினும் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த விவரங்கள் திரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் கூறப்பட்டதாகவும், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார்.