நாட்டு மக்களின் பாதுகாவலனாக இருப்பேன் என உறுதியளித்த மோடி தற்போது சில தொழிலதிபர்களுக்கு மட்டும் பாதுகாவலராக செயல்படுகின்றார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேரத்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக-வும், பாஜக-வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று ஆல்வார் மாவட்டம் மாலகேடா நகரில் ராகுல் காந்தி சூராவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இன்றைய கூட்டத்தில் பேசிய ராகுல், 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலை அளிப்போம்" என வாக்குறுதி அளித்த மோடி, நாட்டில் உள்ள படித்த, வேலையில்லாத இளைஞர்களை வஞ்சித்து விட்டார் என குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களை ஒட்டுமொத்தமாக மோடி வஞ்சித்து விட்டார். 



வாக்குறுதியினை நிறைவேற்றாத பாஜக அரசினால் இதே ஆல்வார் மாவட்டத்தில் 4 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.


2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது நாட்டு மக்களின் பாதுகாவலனாக இருப்பேன் என உறுதியளித்த மோடி தற்போது நாட்டின் பாதுகாவலனாக ஆனபிறகு, சில தொழிலதிபர்களுக்கு மட்டும் பாதுகாவலராக செயல்படுகின்றார்.


ஒவ்வொரு மேடைப்பேச்சின்போதும் பாரத மாதா கி ஜே என்று கூறும் மோடி, பாரத மாதா என்றால் இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களை குறிக்கும் என்பதை மறந்து விட்டார். சில தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்த மோடி, ராஜஸ்தான் விவசாயிகளின் கடனில் ஒரு ரூபாய்கூட தள்ளுபடி செய்ய முன்வரவில்லை. என தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராகுல் காந்தி பிரச்சார உரையினை நிகழ்த்தினார்