ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார்- பிரதமர் மோடி
-
பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் உள்ள நிர்வாக செயலாளர்கள் இன்ஸ்டிடியூட்டின் கோல்டன் ஜூப்ளி ஆண்டின் திறப்பு விழாவில் ஆற்றிய உரை:-
ஏப்ரல், ஜூன் மாத காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. அதை சரிசெய்யும் பொறுப்புடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களில் 7.5% வளர்ச்சியை அடைந்த பொருளாதாரம், ஏப்ரல் மற்றும் ஜூன் மாத காலாண்டில் சரிவடைந்துவிட்டது.
பாஜக ஆட்சிக்கு பின்னர், தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. ஒரேயொரு காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கீழ் சென்றிருப்பது, அவநம்பிக்கைவாதிகளை பூஸ்ட் செய்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 9க்கு முன்னால், 12 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கடந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்ததை சிலர் அழிவு அறிகுறியாக குறிப்பிடுகிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 8 தருணங்களில், 5.7 சதவீதமாகவோ அல்லது அதை விட குறைவாகவோ உள்நாட்டு உற்பத்தி விகிதம் இருந்துள்ளது. இந்தியாவை வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றியதே நாங்கள்தான். பொருளாதாரம் உறுதியான நிலையில் இருக்கிறது. இந்தியா புதிய வளர்ச்சி பாதையை நோக்கி நடைபோடும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் முட்டுக்கட்டைகளை கண்டறிந்து அகற்றுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிவுறுத்தி உள்ளேன். மேலும் இதனால் 2 லட்சத்து 10 ஆயிரம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 காலாண்டுகளில், உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறைந்ததை மட்டுமே பார்த்த விமர்சகர்கள், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 10 சதவீதமாக இருந்த பண வீக்கத்தை நாங்கள் 2.5 சதவீதமாக குறைத்ததை பார்க்க தவறி விட்டனர். மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை 4 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும், நிதி பற்றாக்குறையை 4.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும் குறைத்துள்ளோம். மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டியில் உள்ள எந்த பிரச்சனையையும் சுலபமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.