பொருளாதார மந்தநிலை குறித்து மோடி அரசாங்கத்தின் மௌனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக சரிந்தது.


பொருளாதார மந்தநிலையை கவனத்தில் கொள்ளாத அரசாங்கத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா, பொருளாதார மந்தநிலை குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; ‘கவுண்ட் டவுன்: நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து அன்றாடம் செய்திகள் வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பது மிகவும் ஆபத்தான போக்கு.



மன்னிப்பு கேட்பதும், வார்த்தைகளால் சமாளிப்பதும், வதந்திகளும் எதற்கும் பயனளிக்காது. மத்தியில் ஆளும் அரசுக்கு பொருளாதார மந்தநிலைக்கு தீர்வு காண்பதற்கு வழியும் இல்லை, மக்களிடம் வாக்குறுதி அளிப்பதற்கு வலிமையும் இல்லை’ என மத்திய அரசை கடுமையாக குற்றம் சட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.