மும்பையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்துவரும் இந்த கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. 


நேற்று அதிகாலை கிழக்கு மலாட்டின் குடிசை பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகினர். இந்த இடிபாடுகளில் லேசான காயத்துடன் பிரியா எனும் 8 வயதுடைய சிறுமி பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார். இந்த இடிபாடுகளில் சிக்கி, மீண்ட சிறுமி பிரியாவின் தாய், தந்தை, சகோதரி என அனைவரும் பலியாகினர். சிறிய வயதில் குடும்பத்தையே இழந்து அப்பகுதியில் தவித்து வரும் பிரியாவை கண்டு அப்பகுதி மக்கள் கண் கலங்கி உள்ளனர். 


பிரியாவின் உறவினர்கள் மும்பையில் வசிக்கின்றனர். அவர்கள் இறந்த பிரியாவின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது. பிரியாவின் தங்கையை காப்பாற்ற பேரிடர் மீட்புப் படையினர் கடுமையாக போராடியுள்ளனர். இறுதியில், சடலமே கிடைத்தது என அதிகாரிகள் கூறியது அப்பகுதி மக்களை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மும்பையின் மலாட் பகுதியில் குடியிருப்புகள் தரைமட்டமானதில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மும்பையில் வரலாறு காணாத கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.