மும்பையில் கனமழை: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை!
மும்பையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணத்தால் சுமார் அரை மணிநேரம் மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.
மும்பையில் நேற்று காலையிலிருந்து கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையையும் மழை வெள்ளம் ஆக்கிரமித்தது.
இதன் காரணமாக மாலை 6.49 மணிமுதல் இரவு 7.15 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டது. மும்பைக்கு வரவேண்டிய விமானங்கள் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 20 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டன.
பின்னர் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதும், வாரணாசியிலிருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தை ஒட்டிய சேற்றில் சிக்கியது. விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே அடுத்த 72 மணிநேரம் வரை மும்பையிலும் சுற்றுப்புறப் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் மும்பையில் இன்று(புதன் கிழமை) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.