அனைத்து மாநிலங்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே தனது நோக்கம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் அவர் ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலும், சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா, பாட்டபாரா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார்.


அப்போது பேசிய அவர், ஒடிசா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே பா.ஜ.க.வின் நோக்கம் என்றார். கொளுத்தும் வெயிலிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக தமது பிரசாரத்திற்கு வருவதை சுட்டிக்காட்டிய மோடி, மத்திய அரசுக்கு மக்கள் கொடுக்கும் இந்த ஆதரவை பார்த்து எதிர்க்கட்சிகள் தூக்கத்தை தொலைத்து விட்டன என்று கிண்டலடித்தார். 


பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்ற மோடி, இதன் மூலம் நாட்டின் தண்ணீர் பிரச்சனை முழுவதும் தீர்த்து வைக்கப்படும் என்றார். காங்கிரசின் கை வளர்ச்சிக்கானதா அல்லது நாட்டின் அழிவுக்கானதா என்று மோடி வினா தொடுத்தார். மாவோயிஸ்ட்களால் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதாக கூறிய அவர், பா.ஜ.க.வால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண முடியும் என்றார்.


மேலும், மோடி என்று யார் பெயர் வைத்திருந்தாலும் சிலர், அவர்களை கேலி செய்வதாக எதிர்க்கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் பிரதமர் சாடினார்.