நாகாலாந்து முதல்வர் ராஜினாமா!
நாகாலாந்து மாநிலத்தில் அசாதரணமான அரசியல் சூழல் நிலவி வருவதால், அம்மாநில முதலமைச்சர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
நாகாலாந்து மாநிலத்தில், பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் 33 சதவிகித இட ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் டி.ஆர்.ஜெலியாங் தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், இட ஒதுக்கீடு விவகாரத்தை முதலமைச்சர் சரியாக கையாளவில்லை என்று கூறப்பட்டது. இதையொட்டி பொதுமக்களின் போராட்டம் காரணமாக முதல்வர் டி.ஆர்.ஜெலியாங்கிற்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியான நாகாலாந்து மக்கள் முன்னணி ஆட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் நியூபி ரியோ, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 49 பேரை ஒருங்கிணைத்து, தமிழகத்தில் நடந்ததைப் போன்று அங்குள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைத்துள்ளார்.
இதனிடையே, சொந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பு மற்றும் அணி மாறியதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளான முதலமைச்சர் டி.ஆர்.ஜெலியாங், நேற்று திடீரென முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.