தீவிரவாதிகள் மீதான தாக்குதல் குறித்து எதிர்கட்சிகள் ஆதாரம் கேட்பதா? என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டையே அதிர வைத்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. 


இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சுமார் 300-க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது, எனினும் தீவிரவாத முகாம்களை அழித்தததாக மத்திய அரசு கூறுவது ஆதாரமற்றது, வாக்கு வங்கிக்காகவே மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையினை எடுத்தது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டன.



இந்நிலையில் பீகார் மாநில பொதுகூட்டத்தில் பேசிய மோடி, தீவிரவாத முகாம்களை அழித்ததற்கு ஆதாரங்களை கோருவது ராணுவத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். 


பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியும், அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த CRPF வீரருக்கு அஞ்சலி செலுத்தினார்.


பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை அழித்ததை எண்ணி ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால் நமது சொந்த மண்ணைச் சேர்ந்த சிலர் துல்லிய தாக்குதல் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மறைமுகமாக சாடினார்.


தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்க தொடங்கி இருப்பதாகவும், இது எதிரி நாட்டுக்கு பயன் விளைவிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளாக இருந்து வந்த ஊழல் மற்றும் இடைத்தரகர் முறையை ஒழிக்கும் தைரியம் பாஜக அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும் மோடி பேசினார்.