சிறைக்கு செல்லுவாரா நவ்ஜோத் சிங் சித்து? வழக்கை கையில் எடுத்த கோர்ட்
முன்னால் கிரிக்கெட் வீரரும் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள் நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா நகரைச் சேர்ந்த 65 வயதான குர்னாம் சிங்கை தாக்கியதில், சில நாட்கள் கழித்து அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை அடுத்து நவ்ஜோத் சிங் சித்து மீது வழக்கு பதிவு செய்து பஞ்சாப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் போதிய சாட்சியம் இல்லாததால் நவ்ஜோத் சிங் சித்துவை வழக்கிலிருந்து விடுவித்தது பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் நவ்ஜோத் சிங் சித்து குற்றவாளி என்றும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையையும், ரூ.1 லட்சம் அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நவ்ஜோத் சிங் சித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைத்ததோடு, வழக்கை ஒத்தி வைத்தது. இதுவரை தீர்ப்பு வழங்கப்பட வில்லை.
தற்போது, நவ்ஜோத் சிங் சித்துக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை குறித்து பதில் அளிக்க காங்கிரஸ் தலைவருக்கு அறிக்கையை அனுப்பி உள்ளது நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு.
முப்பது ஆண்டு கழித்து மீண்டும் நவ்ஜோத் சிங் சித்துக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளதால், இந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்து சிறைக்கு செல்லுவாரா? அல்லது விடுவிக்கப்படுவாரா? என எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது.