உலகைச் சுற்றி வரும் பாரம்பரிய போட்டியில் இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பத்திரமாக மீட்பு...!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோல்டன் க்ளோப் எனப்படும் பாய்மர படகில் உலகைச் சுற்றி வரும் பாரம்பரிய போட்டியில் இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி கலந்து  கொண்ட சுமார் 30 ஆயிரம் மைல் தூரம் கடலில் பயணிக்கும் இந்தப் போட்டியில் 10 ஆயிரம் மைல்களுக்கு மேல் பயணித்த நிலையில் மோசமான அந்தச் சம்பவம் நடந்தது. தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அபிலாஷ் டோமி இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட எஸ்.வி துரயா படகில் சென்று கொண்டிருக்கும்போது, மோசமான வானிலை காரணமாக அவரது படகு விபத்தில் சிக்கியது. கடும் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக அவரது படகு சின்னாபின்னமானது. 


அந்த இடத்தில் அப்போது 130 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. புயல் காரணமாக 14 மீட்டர் உயர அலையும், கனமழையும் அந்தப் பகுதியில் பெய்து வருவதாகத் தெரிகிறது. இதில் அவரது படகு முழுவதும் சேதமடைந்தது. அதோடு அபிலாஷ் டோமிக்கும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. போட்டியாளர்களுடனான அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. 


இதனைத் தொடர்ந்து அபிலாஷ் டோமியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்திய கடற்படை முழுவீச்சில் களமிறங்க, இந்தியாவுக்கு உதவியாக ஆஸ்திரேலியா கடற்படையும் களமிறங்கியது. நேற்று, அவரது படகு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமம் நீடித்தது. இந்நிலையில் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் மீட்புப்பணி தொடர்பாகப் பேசுகையில், ‘தெற்கு இந்தியபெருங்கடல் பகுதியில் அபிலாஷ் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.  மொரிஷியஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று, அவரின் படகைக் கண்டுபிடித்தது. அப்போது அதிகாரி டோமி அவசரகால கருவியின் (EPIRB) உதவியுடன் அந்த விமானத்துக்குத் தகவல் அனுப்பினார்’ என்றார். 


இதை தொடர்ந்து, இன்று பலத்த போரட்டத்திற்கு பின்னர் இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமியை பத்திரமாக மீட்டனர். இதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து வருகின்றனர். அவர், நினைவுடன் இருப்பதையும் இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.