மும்பை: இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) சரத் பவார் (Sharad Pawar) இரு கட்சிகளுக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து சிவசேனா சட்டமன்றத்தில் என்.சி.பி.க்கு ஆதரவளிக்கும் என்று சஞ்சய் ரவுத் தன்னிடம் கூறியதாக ஷரத் பவார் கூறினார். இருப்பினும், சிவசேனா பெருமை பேசும் 175 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். "அவர்கள் (பாஜக மற்றும் சிவசேனா) அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களுக்கு எந்தவொரு அரசியல் நெருக்கடியும் நாங்கள் தர விரும்பவில்லை. அடுத்த சில நாட்களில் நான் சோனியா காந்தியை சந்திப்பேன்" என்று சரத் பவார் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அகமது படேலுடனான நிதின் கட்காரி சந்திப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த சரத் பவார், " இருவரின் சந்திப்பு கூட்டத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக சாலை மேம்பாட்டு பணி குறித்து ஆலோசனை செய்ய சந்தித்து இருக்கலாம் எனக் கூறினார்.


மேலும் அவர் பேசுகையில், மகாராஷ்டிராவில் என்.சி.பி அரசாங்கத்தை அமைக்காது என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். "சிவசேனாவும் பாஜகவும் 25 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளன. அவர்கள் அரசாங்கத்தை அமைப்பார்கள். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்படும் எனக்கூறுவது சிவசேனாவை அச்சுறுத்த மட்டுமே. இன்னும் 24 மணிநேரம் மிச்சம் இருக்கிறது. இருவருக்கும் (பாஜக-சிவசேனா) இடையில் சமரசம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் கடைசி நேரத்தில் சில முடிவு எடுப்பார்கள் என்றும் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.


அதுமட்டுமில்லாமல், மாநிலத்தில் அரசு அமைப்பதற்கான எண்ணிக்கை எங்களிடம் இருந்திருந்தால் என்சிபி (NCP) இவ்வளவு காலம் காத்திருக்காது என்று கூறினார். "நான் மீண்டும் முதலமைச்சராக ஆக விரும்பவில்லை. நான்கு முறை மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்துள்ளேன். எங்களிடம் பெரும்பான்மை இருந்தால், எப்போதே அரசாங்கத்தை அமைத்திருப்போம். பாஜக மற்றும் சிவசேனா சீக்கிரம் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றார். 


அமித் ஷா குறித்து பேசிய ஷரத் பவார், மகாராஷ்டிராவில் மத்திய உள்துறை அமைச்சரின் திறமைகளைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்றார். "பாஜகவுக்கு எப்பொழுதெல்லாம் மாநிலங்களில் ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லாத போதும், அவர்கள் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளனர். அந்த திறமைகளுக்கு முக்கியக் காரணமாக அமித் ஷா அறியப்படுகிறார். மகாராஷ்டிராவில் அவரது திறமைகளைப் பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.


அதாவது பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 288 இடங்களில் 162 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. அதேவேளையில் காங்கிரஸ் (NCP-Congress alliance) தலைமையிலான கூட்டணி 104 இடங்களை பெற்றது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். ஆனால் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், அதிகாரப்பகிர்வு காரணமாக, இன்னும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.