புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை செய்ய என்சிபி தலைவர் சரத் பவார் இன்று டெல்லி வந்துள்ளார். அவர் மாலை 5 மணிக்கு சோனியா காந்தியை, அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியது பாஜகவுக்கு திரும்பிச் செல்வது இல்லை. சிவசேனா மகாராஷ்டிராவில் அரசு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் என்.சி.பி, சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. அதனால்தான் இது சிறிது காலதாமதம் ஆகிறது. ஆனால் மூன்று கட்சியும் சேர்ந்து இறுதியில் ஆட்சி அமைக்கும். சிவசேனா டிசம்பர் முதல் வாரத்திற்குள் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் எனக் கூறினார். 


அதேபோல இன்று காலை டெல்லி வந்த என்சிபி தலைவர் சரத் பவார் கூறுகையில், "பாஜகவும் சிவசேனாவும் தேர்தலில் ஒன்றாகப் போராடினர், அவர்கள் சாத்தியமான கூட்டணியில் தங்கள் பாதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். நாங்கள் எங்கள் அரசியலைச் செய்வோம்" என தெரிவித்தார். மேலும் அவர், சோனியா காந்தியை, அவரது இல்லத்தில் தான் சந்திக்க இருப்பதாவும், அதன் பிறகு ஒரு உறுதியான முடிவு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது எனவும் கூறினார்.


மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து பேசி, முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மூன்று கட்சிகளிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 16 அமைச்சர் பதவிகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-க்கு 14 பதவிகளும், காங்கிரசுக்கு 12 பதவிகளும் ஒதுக்கப்படுவதாக பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாம். துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும், சட்டசபை கவுன்சில் தலைவர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும், அதன் துணை தலைவர் பதவி சிவசேனாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. 


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது. பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் இதுவரை, அந்த முயற்சி முழுமை அடையவில்லை. 


தேர்தலுக்கு முந்தைய நட்பு கட்சிகளா பாஜக-வும், சிவசேனாவும் அக்டோபர் 21 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. 288 இடங்களில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றது. இருப்பினும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சுழற்சி முதலமைச்சர் பதவியைக் கோரியதைத் தொடர்ந்து கூட்டணி பிரிந்தது.  மறுபுறம், மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44 மற்றும் 54 இடங்களை வென்றன. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது.