அடுத்த ஒரு வருடத்திற்கு... பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷா தேர்வு
பாஜகவின் புதிய தலைவராக அமித்ஷா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
புது டெல்லி: டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாஜக மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் புதிய தலைவராக அமித்ஷா மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நடந்து முடிந்த 2019மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவராக வலம் வந்த அமித்ஷாவுக்கு, உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பாஜக-வின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஏனென்றால் பாரதீய ஜனதா கட்சியின் விதிகளின் படி, கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர் அமைச்சராக பொறுபேற்றுக் கொண்டால், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதேபோல தான் கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருந்தார். அப்பொழுது பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பாஜக தலைவர் பதவியை ராஜ்நாத் சிங் ராஜினாமா செய்தார்.
தற்போது பாஜக தலைவராக உள்ள அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என எதிர் பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர்கள் கூட்டத்தில், பாஜகவின் அடுத்த தலைவர் யார்? என ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர், மீண்டும் பாஜகவின் தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அடுத்த ஒரு வருடத்திற்கு அவரை தலைவர் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்ப்பட்டு உள்ளது.