புத்தாண்டில் புதிய சலுகைகள் பிரதமர் மோடி அறிவிப்பு
நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பல புதிய சலுகைகளை அறிவித்தார்.
தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:-
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையால் மக்களுக்கு பெரும் கஷ்டங்கள் ஏற்பட்டதை நான் அறிந்துள்ளேன். ஆனால் 125 கோடி மக்களும் நேர்மையாக வும், உண்மையாகவும் இருந்து அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து வருவதுக்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களின் முன்பு மக்கள் வரிசையில் நின்றபோதிலும் ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து அவர்கள் பின்வா ங்க தயாராக இல்லை என்றும், தனது உரையின் போது அவர் குறிப்பிட்டார். ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அரசியல் கட்சிகளும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சலுகைகள்:-
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் கருப்பு பணம் குவிப்பது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் அளவை விட, புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு அதிகமாக இருந்ததால் நாட்டில் விலைவாசி உயர்ந்தது.
கருப்பு பண ஒழிப்பில் மக்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொண்டது வியப்பை அளிக்கிறது.
முடங்கி கிடக்கும் ரொக்கப்பணம் (கருப்பு பணம்) தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கணக்கில் வரும் போது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
இந்தியாவில் 24 லட்சம் பேர்தான், தங்கள் வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் என்று தெரிவித்து உள்ளனர்.
சட்ட விரோதமாக சொத்து குவித்தவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமையைச் செய்யும். ஆனால் நேர்மையான மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுடைய சிரமங்களை குறைக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்.
சாமானிய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும், நேர்மையற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் அதிகாரிகளின் பணி ஆகும்.
தவறு செய்யும் வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் யாராவது தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் தப்பவிடமாட்டோம்.
வங்கிகளுக்கான பொற்காலம் இது. வங்கிகள் இனி கடும் போக்கை கைவிட்டு ஏழைகளுக்கான சேவையில் ஈடுபடவேண்டும். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக பணம் வங்கிகளில் இருந்தது இல்லை. எனவே ஏழைகள், நடுத்தர மக்களின் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
நகர்ப்புறங்களில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.9 லட்சம் வரையிலான கடனுக்கு வட்டியில் 4 சதவீதமும், ரூ.12 லட்சம் வரையிலான கடனுக்கு வட்டியில் 3 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் வீடு கட்டுவதற்காக ஏழைகளுக்கு வழங்கப்படும் ரூ.2 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டியில் 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிக்கப்படும்.
குறுவை பருவ சாகுபடி 6 சதவீதமும், ரசாயன உரங்கள் விற்பனை 9 சதவீதமும் அதிகரித்து உள்ளது.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அதிகரிக்கப்படும்.
குறுவை பருவத்துக்காக மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கும் பயிர்க்கடனுக்கு 60 நாட்களுக்கான வட்டி தொகையை அரசாங்கமே செலுத்தும்.
3 லட்சம் விவசாயிகளின் கிசான் கடன் அட்டைகள் 3 மாதத்துக்குள் ரூபே அட்டைகளாக மாற்றப்படும். இதன்மூலம் அவர்கள் கடன் பெறுவது எளிதாகும்.
நபார்டு வங்கி மூலம் கடந்த மாதம் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் அது ரூ.41 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும்.
முத்ரா வங்கி மூலம் கடந்த ஆண்டு 3½ கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை வருகிற ஆண்டில் இரட்டிப்பாக அதிகரிக்கும்.
சிறு வியாபாரிகளுக்கு ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு மத்திய அரசு உத்தரவாதம் வழங்கும். தற்போது இந்த வரம்பு ரூ.1 கோடியாக உள்ளது.
சிறுதொழில்களுக்கான ரொக்க கடன் வரம்பை 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்குமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன.
மூத்த குடிமக்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ரூ.7½ லட்சம் வரையிலான வைப்புத்தொகைக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி தொகை மாதம்தோறும் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவ செலவுக்காக ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தேர்தல் செலவினங்கள் அதிகரித்து வருவதால் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களுக்கு கருப்பு பணமே காரணம். மத்திய அரசின் நடவடிக்கையால் பயங்கரவாத செயல்கள் முடக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர்கள் கூட நல்வழிக்கு திரும்பி உள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1917–ம் ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாகிரகத்தை தொடங்கினார். சத்தியாகிரகம் தோற்றுவிக்கப்பட்ட நூற்றாண்டில் நன்மையை நோக்கி நடைபோடவேண்டும் என பிரதமர் மோடியின் தனது உரையில் கூறியிருந்தார்.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.