PNB மோசடி: தப்பியோடிய நிரவ் மோடி இங்கிலாந்தில் தஞ்சம்!
பணமோசடி செய்துவிட்டு பிரிட்டனில் பதுங்கியுள்ள நிரவ் மோடி, அந்நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு அனுப்பியுள்ள தகவலின் படி ரூ.11,400 கோடி முறைகேடு நடந்திருப்பது குறிப்பிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது.
இந்த ஊழல் தொடர்பாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹுல் சோக்ஸி ஆகியோருக்குச் சொந்தமான 5,100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, சம்பந்தப்பட்ட நிரவ் மோடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, இருவரும், தற்போது, வெளிநாடுகளுக்கு தப்பியோடியதை அடுத்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி, இங்கிலாந்து அரசிடம் அரசியல் தஞ்சமடைந்துள்ளதாக பினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரிட்டன் உள்துறை அலுவலகம் கூறுகையில், தனிநபர் வழக்கு குறித்து விபரம் ஏதும் அளிக்கப்படவில்லை. நிரவ் மோடி எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை என தெரிவித்துள்ளது. இருப்பினும், நிரவ் மோடி தற்போது லண்டனில் இப்பதாகவும், அவர் அந்நாட்டு அரசிடம் அரசியல் தஞ்சம் புக உதவி கேட்டுள்ளதாகவும் பினான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரவ் மோடியை இதுவரை கைது செய்யாதது குறித்து பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நிரவ் மோடியை கைது செய்து இந்தியா அழைத்து வருவதற்காக சட்ட அமலாக்கத்துறையின் பதிலுக்காக இந்திய அரசு காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசு இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.