நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 


முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17 ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முகேஷ் சிங்கின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு, நேற்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் விசாரணை நடத்தினர்.


கருணை மனுவை ஜனாதிபதி  தள்ளுபடி செய்த நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக, முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார். மரண தண்டனை தொடர்பான தீர்ப்புகளையும், கருணை வழங்குவது தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். அதன்பின்னர் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும், அவருக்கு கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். கருணை மனு பரிசீலனைக்காக, வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார். 


இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், முகேஷ் சிங்கின் மனு மீதான தீர்ப்பை (நாளை) இன்று வழங்குவதாக தெரிவித்து இருந்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்பயா குற்றவாளியின் மனுவை சுப்ரீம்  கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.