நிர்பயா கொலை குற்றவாளிகள் நாளை தூக்கிலிடப்படுவது உறுதியானது!!
நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமாரின் கடைசி மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!
நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமாரின் கடைசி மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!
நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திகார் சிறை எண் 3-ல் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் செய்து முடித்து தயார் நிலையில் வைத்துள்ளது. இதற்கிடையில், அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி தூக்குதண்டனையில் இருந்து 3 முறை தப்பித்த குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26) மற்றும் அக்ஷய் குமார் சிங்(31) ஆகியோர் வாய்ப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததையடுத்து மரண தண்டனைக்கான நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், இதற்கிடையே, இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். ஆனால், சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, தூக்குத்தண்டனை நிறுத்திவைக்ககோரி குடியரசு தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
இந்த நிலையில் பலமுறை தூக்கு தண்டனைக்கான தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், கடந்த 5 ஆம் தேதி முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கும் வரும் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய ஆணையை டெல்லி விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் பவன் குப்தா தன் கடைசி சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2012 ஆம் ஆண்டு பவன் குப்தாவாகிய, தான், சிறுவனாக இருந்ததால், சிறார் சட்டத்தின் கீழ் தான் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பை வழங்கி இருக்க வேண்டும். அந்த சட்டத்தின் கீழ் தான் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே 3 முறை இவர்களுக்கு தூக்குத் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் நிலுவையில் இருக்கிறது என்பது போன்ற காரணங்கள் கூறப்பட்டு இவ்வாறு 3 முதல் மூன்று முறை மரண தண்டனை தேதி மாற்றப்பட்டது. ஆனால் கடைசி சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நாளை காலை 5.30 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக டெல்லி திஹார் சிறையில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து வகைகளிலும் சிறைத்துறை இதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நிர்பயாவின் தாய், உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளார்.