அடியாட்களை அனுப்பும் அதிகாரம் எந்த வங்கிக்கும் இல்லை -அனுராக் தாக்கூர்
வாராக்கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பும் அதிகாரம் எந்த வங்கிக்கும் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்!
வாராக்கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பும் அதிகாரம் எந்த வங்கிக்கும் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்!
பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அணுராக் தாக்குர், வாராகடன்களை வசூலிக்க வெளியாட்களை நியமிக்க ரிசர்வ் வங்கி சில நெறிமுறைகளை பரிந்துரைத்துள்ளது. இதன்படி, கடன்வசூலிக்கும் முகவர்கள் மீது குற்றவழக்குகள் உள்ளனவா என்பதை உள்ளூர் காவல்துறை மூலம் விசாரித்த பின்னரே நியமனம் செய்யப்பட வேண்டும். கடன் வசூலிக்கும் முகவர்கள், வாடிக்கையாளர்களிடம் சட்ட விரோதமாகவும், அநாகரிகமாகவும் நடந்து கொள்ள கூடாது.
ஜப்தி நடவடிக்கைக்கு முன்பு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அடியாட்களை அனுப்பி வாராக்கடன்களை வசூலிக்கும் அதிகாரம் எந்த வங்கிக்கும் வழங்கப்படவில்லை.
நாட்டில் உள்ள சில அரசு வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்கள் வாராக்கடன்களை வசூலிக்க அடியாட்களை அனுப்பி கடன் பெற்ற நபர்களை கேவலமாக நடத்துவது நடைமுறையில் உள்ளது.
இதுபோன்ற சம்பவங்களின்போது கைகலப்புகளும் நடைபெறுவதுண்டு. சில இடங்களில் அடியாட்களின் அத்துமீறல்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதும் உண்டு. இத்தகைய செயல்களில் ஈடுபட எந்த வங்கிகுக்கும் ரிசர்வ் வங்கி அதிகாரம் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.