மக்களவையில் எனது பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை: மோடி!
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, மக்களவையில் எனது பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை என்றார்.
பாராளுமன்ற மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி இன்று காலை பேசினார். காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் கூச்சல்களுக்கு இடையே பிரதமர் மோடி ஆவேசமாக 90 நிமிடங்கள் பேசினார். தனது உரையின் பெரும் பகுதியை அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார்.
ஆனால், அவரது பேச்சை விட எதிர்புறம் இருந்த எம்.பி.க்களின் கூச்சல்தான் கேட்டது. இதனை அடுத்து, பிற்பகலில், மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவையில் எனது பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை, அமளியில் தான் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூற தயாராக உள்ளேன். காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என கூறுவதற்கு எனக்கு உரிமை கிடையாது.
மக்களின் நல்வாழ்வுக்காக இன்னும் ஏராளமாக செய்யவேண்டி உள்ளது. என்னையும் எங்கள் திட்டத்தையும் திட்டுவதாக நினைத்து நீங்கள் (காங்கிரஸ்) நாட்டைத்தான் திட்டுகிறீர்கள். மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகளின் சிறந்த ஆலோசனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன். எங்களை போன்ற சாமனியர்கள் ஆட்சியில் இருப்பதை சிலர் விரும்புவதில்லை.
இனி காங்கிரஸ் தேவை இல்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறி உள்ளார். காந்தி ,விவேகானந்தர் விரும்பியது புதிய பாரதம். ஆனால், காங்கிரஸ் விரும்புவது எமர்ஜென்சி பாரதம். நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. காந்தி விரும்பிய புதிய இந்தியாவை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது? என தெரியவில்லை இவ்வாறு பிரதமர் பேசினார்.