நமோ டிவி நிகழ்ச்சிகளை ஔிபரப்பும் முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நமோ டிவி என்ற டிஜிட்டல் ஒளிபரப்பை பாஜக தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் பழைய பேச்சுகள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன.


இதையடுத்து, நமோ செயலியின் மற்றொரு வடிவம்தான் நமோ டிவி என்று பாஜக வலியுறுத்தியது. இந்நிலையில், நமோ டிவியில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகளுக்கு முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதை ஆராயுமாறு டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. அதில், நமோ டிவி லோகோவுக்கு டெல்லி தேர்தல் அலுவலகத்தின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பழைய பேச்சுகள் அடங்கிய தொகுப்புகளுக்கு சான்றளிக்க வேண்டும் என பாஜக கேட்டுக் கொண்டது. ஆனால், அவை ஏற்கெனவே ஒளிபரப்பு செய்யப்பட்டவை என்பதால் இனி சான்றளிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஊடக ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதல் பெறாத எந்தவொரு அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளும் நமோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக்கூடாது என உத்தரவில் தெரிவித்திருந்தது. மேலும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் அரசியல் தொடர்பான செய்திகளை ஒளிப்பரப்பு செய்ய ஊடக ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு குழுவின் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தேர்தல் ஆணையத்தில் இந்த உத்தரவை, டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.