BJP-யுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - சரத் பவார் திட்டவட்டம்!
பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!
பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணியில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தலைவருமான அஜித் பவார் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தனர்.
தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதனையடுத்து, அஜித் பவாரை கட்சியிலிருந்து நீக்குவதாக சரத்பவார் அறிவித்தார். இந்நிலையில், இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த மகாராஷ்டிரா கவர்னருக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட அவசர வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவார் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். ’நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எப்போதும் இங்கே தான் இருப்பேன். சரத்பவார் தான் எங்கள் தலைவர். மேலும், எங்கள் பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்கி மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்களுக்காக நேர்மையாக உழைக்கும்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார். பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; ‘பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்சி அமைப்பதற்காக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது எங்கள் கட்சியின் ஒருமித்த முடிவாகும்.
மக்களின் நடுவே குழப்பத்தை விளைவிப்பதற்காகவும் தவறான யூகத்தை உருவாக்கவும் இதுபோன்றதொரு கருத்த அஜித்பவார் தெரிவித்துள்ளார்’ என்று சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, மொத்தம் உள்ள 54 எம்எல்ஏக்களில் 50 எம்எல்ஏக்கள் தங்களுடன் இருப்பதாக தேசிய வாதகாங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்தார். பாஜக வசம் உள்ள 4 எம்எல்ஏக்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிச்சயம் தங்களுடன் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.