இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்த்தார்ப்பூர் வழித்தடம் அடிக்கல் நட்டு விழாவில்  கல்வெட்டில் எழுதியிருந்த பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பெயரை கருப்பு நாடாவைக்கொண்டு அமைச்சர் ஒருவர் மறைத்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீக்கிய குருவான குருநானக் தேவ் தனது கடைசி காலத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் வசித்தார். முதல் சீக்கிய குருவான அவர் இங்கு 12 ஆண்டுகள் வசித்ததாகவும், அவர் மெக்காவுக்கு சென்ற போது அவருக்கு அளிக்கப்பட்ட உடைகள் இங்கு உள்ளதாகவும் நம்பப்படுகிறது. அருகிலேயே குருத்வாரா தாலி சாஹிப் என்ற இடமும் இருக்கிறது. 


தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கர்தார்பூர் இருக்கிறது. குருநானக் தேவின் 549-ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி கர்தார்பூரில் சிறப்பு வழிபாடுகள் நடக்க இருக்கிறது. இதற்காக, இந்தியாவிலிருந்து செல்லும் 3700 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது. குருநானக் தேவ் பிறந்தநாள் விழாவுக்காக பாகிஸ்தான் வரும் 28 ஆம் தேதி எல்லையை திறக்க உள்ளது.


இந்நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் - பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் கர்த்தார்ப்பூர் இடையே சீக்கியர்கள் வழிபாட்டுக்குச் சென்றுவர வசதியாக வழித்தடம் திறப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. குருதாஸ்பூரில் இதற்காக நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அடிக்கல் நாட்டுகிறார்.



அதற்கான கல்வெட்டில் வெங்கைய நாயுடு, பஞ்சாப் ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் பெயருடன் அகாலிதளத் தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீந்தர் சிங் பாதல் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளன. அரசு பதவியில் இல்லாத அவர்கள் பெயர் இடம்பெற்றதைக் கண்டித்துப் பஞ்சாப் அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தவா, கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர்களின் பெயர் மீது கருப்பு நாடாவைகொண்டு மறைத்தார்.