புதுடெல்லி: பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பஜார் நிறுவனம் வரும் நவம்பர் 24-ம் தேதி முதல், ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க உள்ளதாக, அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு வந்தன.


நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அம்பானி குழுமத்தைச் சேர்ந்த பிக் பஜார் நிறுவனம், ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகளுக்கு தலா ரூ.2000 விநியோகிக்க உள்ளதாகக் கூறியுள்ளது.


இந்த வசதி, நாடு முழுவதும் நாற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 258 பிக் பஜார் ஸ்டோர்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரும் நவம்பர் 24-ம் முதல் அருகில் உள்ள பிக் பஜார் ஸ்டோருக்குச் சென்று தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து டெபிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று கிஷோர் பியானி பிக் பஜார் தலைவர் கூறியுள்ளார்.



இந்த அறிவிப்பு நவம்பர் 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இந்திய அளவில் உள்ள பிக் பஜார் மற்றும் எஃப்பிபி இந்தியா விற்பனை மையங்களில் இந்த சேவை கிடைக்கப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.


எஸ்பிஐ தொழில்நுட்ப உதவியைப் பெற்று, பொதுமக்களுக்கு ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க உள்ளதாகவும் பிக் பஜார் தெரிவித்துள்ளது. எந்த வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், அவர்களுக்கு ரூ.2000 நோட்டுகள் விநியோகிக்கப்படும் என, பிக் பஜார் குறிப்பிட்டுள்ளது.