வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளில் பெரும்பாலானோர் அஸ்ஸாமில் தஞ்சமடைந்துள்ளனர். எனவே தேசிய குடிமக்கள் அடையாளம் காணும் பணியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஈடுபட்டு அறிக்கை அளித்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாம் மாநிலத்தில் வசிப்போர் தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 3.29 கோடி பேர் விண்ணப்பித்தனர். இதில் 2.89 கோடி பேர் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.


இதற்க்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி என்ஆர்சி குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. என்ஆர்சி விவகாரம் மாநிலங்களவையில் எதிரொலித்ததால் இரண்டாவது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில் 3 நாட்கள் டெல்லிக்கு பயணமாக வந்துள்ள மம்தா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர்களை இன்று சந்தித்துப் பேசினார். 


செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:- 


என்ஆர்சி பட்டியல் பாஜக மேற்க்கொண்டதுக்கு முக்கிய காரணம் வாக்கு வங்கி அரசியல் தான். எல்லையில் யாரும் ஊடுருவாமல் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை ஆகும். என்ஆர்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்கிற முறையில் மக்களை துன்புறுத்தக் கூடாது. அசாம் மாநிலத்திற்கு மத்திய அரசு குழுவுடன் எதிர்க்கட்சிகள் குழுவையும் அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் உண்மை எதுவென்று தெரியும். 


என்ஆர்சி விவகாரம் நாட்டின் முக்கிய பிரச்சனை ஆகும். 40 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவின் சுயநலத்தை காட்டுகிறது. இதனால் அண்டை நாடுகளுடான நமது உறவு பாதிக்கப்படும். இதைக்குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசினேன் எனக் கூறினார்.


அசாம் மாநிலத்தில் நடப்பது போல மேற்கு வங்க மாநிலத்தில் நடந்தால் உள்நாட்டு போர் வெடிக்கும், அதனால் நாடே ரத்தக்களறியாகும் எனவும் கூறியிருந்தார். பாஜகவைப் பொருத்தவரை தங்களின் ஆதரவாளர்கள் மட்டுமே நாட்டில் வசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். உள்நாட்டில் மக்களை அகதிகளாக மாற்றி இருக்கிறார் என்பது கவலை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.