டாடா கெமிக்கல்ஸ் நிறுவன இயக்குனர் பதவியிலிருந்து நஸ்லி வாடியா நீக்கம்
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து நஸ்லி வாடியா இன்று நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து நஸ்லி வாடியா இன்று நீக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் நஸ்லி வாடியா டாடா கெமிக்கல்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய குழுமங்களின் இயக்குனராகவும் இருந்து வந்தார்.
நஸ்லி வாடியா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சுயாதீன இயக்குனர் பதவி மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் வாரியத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
முன்னதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அவசர பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நஸ்லி வாடியாவை சுயாதீன இயக்குனர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், வாடியாவை பதவி நீக்கம் செய்யும் முடிவிற்கு 76 சதவீதம் பங்குதாரர்கள் வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் நஸ்லி வாடியா, இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக டாடா மோட்டார்ஸ் அறிக்கை மூலம் தெரிவித்தது.
இந்நிலையில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்தும் நஸ்லி வாடியா இன்று நீக்கப்பட்டுள்ளார்.
அவரை பதவிநீக்கம் செய்யும் முடிவை ஆதரித்து டாடா கெமிக்கல்ஸ் பங்குதாரர்களில் 75.67 சதவீதம் பேர் வாக்களித்ததாக அந்நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.