போக்குவரத்து விதி மீறியதாக டிரக் ஓட்டுநர் ஒருவருக்கு, நாட்டிலேயே அதிகபட்சமாக 86,500 அபராதம் விதிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 


இந்நிலையில், அந்த வகையில் ஒடிசா நாட்டிலேயே அதிக அபராதம் வசூலித்த மாநிலமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக டிரக் ஓட்டுநர் அசோக் ஜாதவுக்கு 85 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சலான் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அங்கீகரிக்கப்படாத நபரை கனரக வாகனம் ஓட்ட அனுமதித்தமைக்காக 5 ஆயிரம் ரூபாய், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக 5 ஆயிரம் ரூபாய், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக 18 டன் எடையை ஏற்றிச் சென்றதற்காக 56 ஆயிரம் ரூபாய், பாதைகளின் கோணத்தை மறைக்கும் படி பொருட்களை விதி மீறி எடுத்துச் சென்றமைக்காக 20 ஆயிரம் ரூபாய், பொதுவான குற்றத்துக்காக 500 ரூபாய் என மொத்தம் 86 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


5 மணி நேரம் அதிகாரிகளுடன் வாதாடி 70 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளார். ஜேசிபி ஏற்றி வந்த அந்த டிரக் நாகாலாந்தைச் சேர்ந்த BLA இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்குச் சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.