மழை வெள்ளத்தால் ரூ.50,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது: எடியூரப்பா
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேரில் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டார்!!
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேரில் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டார்!!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ரூ.50,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து முதற்கட்டமாக மழை வெள்ள பாதிப்பை சரிசெய்ய மத்திய அரசிடம் ரூ.10 ஆயிரம் கோடி கோரியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் சிவமோகாவில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பின் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் அழிந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
நிவாரணப்பணிகள் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில்; இன்று நான் சிவமொகாவில் உள்ள உள்ளூர் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து நிலைமை பற்றி விவாதிப்பேன். 10,000 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். கர்நாடகா மாநிலத்தில் 50,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி, இது தொடர்பாக பிரதமரை சந்திக்க டெல்லிக்கு செல்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.