ஜம்முவில் மேலும் ஒரு கோவில் சேதப்படுத்தப்பட்டு உள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து இண்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு அருகே உள்ள ரூப்நகரில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலை தோடா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 14-ம் தேதி சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அங்கு பெரும் போராட்டங்களும், வன்முறையும் மூண்டன. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. எனினும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.


இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜம்முவின் நானக் நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலை நேற்று இளைஞர் ஒருவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் சாலைகளில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதனால் பதற்றம் அதிகரித்ததால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கோவிலை சேதப்படுத்தியவரை அடையாளம் கண்டதுடன், அவரை உடனடியாக கைது செய்தனர். அங்கு பதற்றத்தை தணிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நிலை தற்போது கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் கோவில் சேதப்படுத்தப்பட்டு உள்ளதால் இதுதொடர்பாக வதந்திகள் எதுவும் பரவாமல் இருக்க அங்கு இண்டர்நெட் சேவையை தடைசெய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அனைத்து மொபைல் மற்றும் பிராட்பேண்ட் அடிப்படையிலான அனைத்து இண்டர்நெட் சேவையானது தடை செய்யப்பட்டது என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.