ஒரே நாடு ஒரே தேர்தல்... அமைச்சரவை ஒப்பதல் - பாஜக அரசு அதிரடி
One Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த `ஒரே நாடு ஒரே தேர்தல்` அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
One Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில், தனது சுதந்திர தின உரையில் கூட பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து நினைவுக்கூர்ந்து பேசியிருந்தார்.
மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது கடந்த ஆட்சிக்காலத்திலேயே முன்னெடுத்தது. முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அன்று மத்திய அரசு நியமித்தது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15ஆவது நிதி குழு முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஸ்ரஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி, முன்னாள் மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் உறுப்பினராக இருந்தனர். HLC செயலாராக இருந்த டாக்டர் நிதன் சந்திரா இந்த குழுவில் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்தார்.
மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?
இந்த குழு 191 நாள்கள் நடத்திய ஆய்வை மேற்கொண்டது. ஆய்வை நிறைவு செய்து 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மார்ச் 14ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்பித்தனர். இந்த அறிக்கைக்குதான் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகும் மசோதா?
மக்களவை தேர்தலையும், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒன்றாக நடத்தும இந்த ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் மேற்கொள்ள மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக, மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைக்களுக்கான தேர்தல்களுடன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்களையும் ஒத்திசைக்க வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் பாதி மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும். ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர 18 அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக்காலத்திலேயே பாஜக தலைமையிலான மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாள்களுக்கு முன் பேசியிருந்தார். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கே பலனளிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் கட்சி ஆகியவை ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. எனவே, இது மக்களவையில் நிறைவேறுமா என்ற கேள்வி பலரிடத்திலும் உள்ளது.
மேலும் படிக்க | டெல்லி புதிய முதல்வர் அதிஷி மர்லினா சொத்து மதிப்பு! சொந்தமாக நகை கூட இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ