ஒரே நாடு, ஒரே தேர்தல்: `400 இடங்கள் இலக்கு` என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுக்க காரணம் என்ன?
BJP 400 Seat Target: ஒரே நாடு, ஒரே தேர்தல்` என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ந்து பாஜக இலக்காகக் கொண்டிருக்கிறது.
One Nation One Election: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வரைவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளது. ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில், 2029-ம் ஆண்டு மக்களவைக்கும், நாட்டில் உள்ள அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த குழு முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலையும், இரண்டாம் கட்டமாக மாநகராட்சி அளவிலான தேர்தலையும் நடத்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சாத்தியம் அல்ல என பலர் கூறி வருகின்றனர். மறுபுறம் சரியான திட்டமிடல் மூலம் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சாத்தியமாக்கலாம், அதன்மூலம் தேர்தல் செலவுகள் குறைக்கப்பட்டு, பணத்தை மிச்சமாக்கலாம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் கொண்டுவர வேண்டும் என்றால், தற்போதைய மத்திய அரசாங்கம் அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த மாற்றம் சாத்தியமாகும்.
எந்தவித பிரச்சனையும் இல்லாமல் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்ட மசோதாவை கொண்டுவர 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பதற்காக பாஜக தனக்கு 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களையும் வெல்வதைத் தொடர்ந்து இலக்காகக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
இது பாஜகவின் புதிய அஜெண்டா அல்ல. அதன் முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். நாட்டில் அடிக்கடி நடக்கும் தேர்தல்கள் நடைபெறுவதால், அதிக செலவினம் ஏற்படுகிறது. அதில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதும், பொருளாதாரச் சேமிப்பை ஏற்படுத்துவதும் தான் இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என பாஜக தரப்பில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசியலமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்ய பாஜக விரும்புவதாக குற்றம் சாட்டுகின்றன. மாநிலங்களின் அதிகாரத்தை குறைக்கவும், இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர அரசு விரும்புவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எந்தவொரு முக்கிய முடிவையும் செயல்படுத்துவதற்கு முன் அனைத்து தரப்பினருடனும் விவாதிப்பதன் மூலம், அது தொடர்பாக தொடர் ஆலோசனை செய்வதன் மூலமும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த சாதகம், பாதகம் ஆராயப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு பெரிய நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன், அனைவரையும் ஒன்றிணைக்க அல்லது குறைந்தபட்சம் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தை மோடி அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறைப்படுத்துவதற்கு முன், ஒரு அரசு இடையில் கலைக்கப்பட்டால், அதற்கு பதிலாக புதிய அரசு எவ்வாறு உருவாகும்? அதன் ஆட்சி காலம் என்ன? போன்ற முக்கியக் கேள்விகள் எழுகின்றன.
ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தினால், அதற்கும் செலவாகும். அதேபோல புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் இருப்பாரா, அல்லது ஐந்து ஆண்டுகளில் மீதமுள்ள நாட்கள் மட்டுமே ஆட்சி செய்வார்களா?
மறுபுறம் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., தங்கள் பதவியை ராஜினாமா செய்து, இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிரதிநிதி மீதமுள்ள பதவிக் காலத்திற்கு மட்டுமே, அவர் பதவியில் நீடிப்பாரா? அல்லது அவருக்கு ஐந்தாண்டுகள் கிடைக்குமா? போன்ற கேள்விகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
அதேபோல 2029ல் அனைத்து சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டால், எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு வரக்கூடும்.
ஏனென்றால் 2029 வரை அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் அரசாங்கம் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மாற்றத்திற்கு அவர்கள் ஒப்புக் கொள்வது கடினம்.
மேலும் படிக்க - SBI தேர்தல் பத்திரம்: தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் கிடைக்கக்கூடிய தகவல்கள்!
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பற்றாக்குறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை போன்ற பல சிக்கல்கள் இருக்கின்றன.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' ஏற்றுக்கொள்வதற்கும், ஏற்காததற்கும் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், பல ஆய்வாளர்கள் இந்த யோசனை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பொருத்தமானதாக கருதுகின்றனர்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் முரணாகிவிடும். எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படும் என மாநில கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மறைமுகமாக அதிபர் ஆட்சியை கொண்டு வரத்தான் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்று இடதுசாரிகள் விமர்சனம் செய்கின்றனர்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது நடைமுறைக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத திட்டம். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதேநேரத்தில் அதிமுக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ